ஒரு பத்திரிகைக்கு நாளை மறுநாள் கதை அனுப்புவதாக ஒத்துக்கொண்டுள்ளேன். ஏனோ எழுதிவைத்த கதைகளை அனுப்ப மனம் இடம்கொடுக்கவில்லை.
– இந்த பத்திரிகை வாசகர்களுக்கு தகுந்த மாதிரியான சிறுகதைகள் அவற்றுள் இல்லை.
– என்னிடம் இருக்கும் கதைகளை இந்த பத்திரிகைக்கு கொடுக்க விருப்பம் இல்லை. அதைத்தவிர, இது போட்டிக்கான சிறுகதை. இப்போட்டியின் விதிமுறைப்படி கடைசியில் ஒரு திருப்பம் இருக்கவேண்டும்.
– பலராலும் அறியப்பட்ட நான் போட்டியில் கலந்து கொள்வது குறித்து எனது முதன்மை வாசகியான பத்மா வருத்தம் தெரிவித்தாள்.இதனால் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை.
– போட்டியின் முடிவு முன்பே தீர்மானிக்கப்பட்டது தான்.
– முடிவும் நான் அறிந்ததே.
– எழுத்தையே தொழிலாக கொண்ட எனக்கு இதுவரை கதைக்கருவுக்கு பஞ்சம் ஏற்பட்டதே இல்லை. ஆனால் இன்று ஏனோ வறட்சி. கடந்த ஆறு வருடங்களாக எழுதாதது கூட காரணமாக இருக்கலாம்.
– கதை எழுத எப்பொழுது முயன்றாலும் ஒரு சிறிய நடைப்பயிற்சி செய்வது எனக்கு வழக்கம்.
இன்றும் நடக்கத் தொடங்கினேன். பழைய கதைகளுக்கு வந்த விமர்சனத்தை அசை போட்ட படியே நடந்தேன். நான் எழுதிய கதைகள் பலதும் வேறு யாரிடமிருந்தாவது எடுத்தாளப்பட்டதே ! ஆதலால் விமர்சனங்கள் என்னை பாதித்ததே இல்லை. அத்திபூத்தாற் நானே சொந்தமாக எழுதும் கதைகளை பிரசுரத்துக்கு அனுப்புவதே இல்லை. எந்த பத்திரிகையும் பதிப்பகமும் அதற்குரிய தகுதியை அடையவில்லை என்பதே எனது வாசகிகளின் கருத்து. நடந்ததில் பத்மாவின் வீட்டருகே வந்துவிட்டேன். ஜன்னல் வழியாக மிதுன் என்னைப் பார்த்து முறைத்தான். சிறு புன்முறுவலோடு அவனைக் கடந்தேன். பத்மாவை மணம் புரிவதற்கு முன்பு அவனுடன் நான் சிறிது காலம் நட்பாக பழகியுள்ளேன். அதன்பிறகு ஏனோ ஒரு இடைவெளி. இன்னும் சிறிது தூரத்தில் ரமேஷ். அவனையும் கடந்தால் சிறிது இடைவெளிவிட்டு முனைவீட்டில் பிரவீன். நடையின் வேகத்தை சற்றே தளர்த்தினேன். நட்பு, காதல் எதுவுமே எனக்கு நிலையானதாக இருந்ததில்லை. எவ்வளவு யோசித்து பார்த்தும் அதற்கான காரணம் என் அறிவிற்கு அப்பாற்பட்டதாகவே இருந்தது.
ம்ம்ம் நினைவை கலைத்துக் கொண்டே நடந்தேன்.
– சிறுகதை என்பது ஐந்து அல்லது பத்து நிமிடத்திற்கான நிகழ்வை அழகாக கூறுவது என்று பலமுறை எழுதியும் பேசியும் உள்ளேன்.
இன்று ஏனோ ஒரு குறுநாவலுக்கான கருவே மனதில் தோன்றுகிறது. நாளை தொலைபேசியில் கதை அனுப்ப முடியாது என்று தெரிவித்துவிட வேண்டியது தான். அதுதான் நியாயமும் கூட. இல்லையென்றால் திருப்பம் கொடுப்பதற்கு மெனக்கெட வேண்டியிருக்கும். இல்லாத கதையில் முடிவு எழுதுவதே கடினம். அதிலும் ஒரு திருப்பம் வேறு என்றால் படிப்பவருக்கு எரிச்சலே மேலிடும். எனக்கென்ன காசா பணமா ? நான் கதையை திருப்பிப் படிக்கக் கூட வேண்டியதில்லை. படித்தாலும் சிரிப்பு தான் வரும். பத்திரிகை ஆசிரியர் மற்றும் வாசகனின் தலையெழுத்தை நினைத்து. நொந்தபடியே தெருவின் எல்லைக்கு வந்திருந்தேன்.
இனி திரும்ப வேண்டும். வலது புறத்தில் ஒரு திருப்பம் இருந்தது.
Advertisement
November 13, 2009 at 3:09 pm |
நல்லா திருப்பினீங்க.மனது வைத்தால இதை விட நல்ல கதைகள் எழுத முடியும்.உங்களிடம் திறமை இருக்கிறது.
November 25, 2009 at 10:44 pm |
நன்றி கோமதி அரசு & கே ரவிசங்கர்.